அகவல்பாவில் பாட்டு எழுதும் முறை

அகவல் பா

சங்கப்பாக்கள் மரபு வழியிலான பாடல்கள்;  மிகுதியான பாடல்கள் அகவற்பாவில் இயற்றப்பட்டுள்ளன.  ஓலைச்சுவடிகளில் எழுதிய காலச் சூழலில் சொற்சுருக்கம்,  பொருள் வளமையேர்டு கூடிய மரபுப் பாடல்களை எழுதினர்.  எனவே பழங்காலத்தில் அகவற்பா,  வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா போன்ற மரபுப் பாடல்கள் செழித்துத் தோன்றின.

மரபுப் பாடல் (அகவற்பா)  எழுதும் முன்

  1. புதுக்கவிதை எழுதிக் கொள்க.
  2. புதுக்கவிதையை அகவற்பாவாக மாற்றுவோம்

சான்று :

தேனினும் இனிய தேன்மலை நாடன்

இருளோடு கலந்து நிற்கும் யாமம்

வஞ்சம் இல்லா நெஞ்சம் படைத்தோன்

நெஞ்சம் கவர் கள்வன் வாராரோ?

துஞ்சாது இருக்கும் எனது கண்ணே !

சான்று :

அன்னாய் வாழி தேன்மலை நாடன்

வஞ்சம் இல்லா நெஞ்சு படைத்தோன்

வஞ்சம் வைத்துப் பிரிந்தானோ?

துஞ்சாது வருந்தும் குவளைக் கண்ணே!

ஆசிரியப்பாவின் பொதுத்தன்மை

  1. மூன்றடி முதல் பல அடிகள் வரை அமையும்
  2. ஈற்றுச்சீர் (பாடலின் இறுதிச்சொல்) ஏகாரத்தில் முடியும். ஓ, ஈ, ஆய், ஐ என் போன்ற  எழுத்துக்களையும் பெற்று முடியும்.
  1. நேரொன்றிய ஆசிரியத்தளை, நிரையொன்றிய ஆசிரியத்தளை பெற்றுவரும். பிறதளைகளும்  கலந்து வரும்.
  1. அகவலோசை பெற்று வரும்.

ஆசிரியப்பா வகைகள்

  1. நேரிசை ஆசிரியப்பா
  2. இணைக்குறள் ஆசிரியப்பா
  3. நிலைமண்டில ஆசிரியப்பா
  4. அடிமறிமண்டில ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பா

ஈற்றயலடி (நிறைவு அடிக்கு முன் உள்ள அடி) முச்சீராக முடியும்.

சான்று

ஞாயும் யாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே     (குறுந்தொகை 40)

இணைக்குறள் ஆசிரியப்பா

முதல் அடியும் நிறைவு அடியும் நான்கு சீர் பெற்றிருக்க இடையில் உள்ள சீர்கள் இரண்டு,  மூன்றாக அமைந்திருக்கும்.

சான்று

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சாரல் நாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்ப்பொல் லாதே

(யாப்பெருங்கலக் காரிகை உரை மேற்கோள்)

நிலைமண்டில ஆசிரியப்பா

அனைத்து அடிகளிலும் நான்கு சீர் பெற்று வருவது

சான்று

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்

பொன்புனை பகழி செப்பங் கொண்மார்

உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்

செங்காற் பல்லி தன்துணை பயிரும்

அங்காற் கள்ளியாங் காடிறத் தோரே                      (குறுந்தொகை 232)

அடிமறிமண்டில ஆசிரியப்பா

(அடிமறி – அடிகளை மாற்றி அமைத்தல்) அடிகளை மாற்றி அமைத்துப் பாரத்தாலும் ஓசையும் பொருளும் மாறாமல் இருப்பது

சான்று

சூரல் பம்பிய சிறுகான் யாறே

சூரர மகளிர் ஆரணங் கிணரே

வுhரலை எனினே யானஞ் சுவலே

சாரல் நாட நீவர லாறே

(யாப்பெருங்கலக் காரிகை உரை மேற்கோள்)

ஆசிரியப்பா இயற்றுவதற்கு முன் அறிய வேண்டியவை

  1. அசை
  2. சீர்
  3. தளை

சொல்லைப் பகுத்துப் பார்க்கும் முறை (அசை பிரிப்பு)

மரபுப் பாடல்கள் எழுதும் பொழுது சொல் பகுப்பும் பார்க்க வேண்டும். இச்சொல்பகுப்பை ‘அசை’ என்றும் கூறலாம்.

அசை இரண்டு வகைப்படும்.

  1. நேரசை
  2. நிரையசை

நேரசைக்கான வரையறை

  1. குறில் தனித்து  –  க
  2. குறில் ஒற்று –  கல்
  3. நெடில் தனித்து –  கா
  4. நெடில் ஒற்று –  கால்

நிரையசைக்கான வரையறை

  1. குறிலிணை (குறில் இணை) (இரண்டு குறில்) – தட, நட
  2. குறிலிணை ஒற்று –  தடம், மரம்
  3. குறில் நெடில் –  கலா
  4. குறில் நெடில் ஒற்று –  கலாம்.

சான்றாக,  நமக்குப் பிடித்த மரங்கள், பூக்கள், பறவைகள், மனிதப்பெயர்களைப் பிரித்துப் பார்க்கலாம்.

அருள்/மொழி

குறிலிணைஒற்று/குறிலிணை

நிரை அசை/ நிரை அசை

வேம்/பூ

நெடில்ஒற்று/நெடில்

நேர் அசை/நேர் அசை

சான்றுப் பாடல் (அசை பகுப்பு)

அன்/னாய் வா/ழி தேன்/மலை நா/டன்

நே/நே      நே/நே     நே நி     நே நே

வஞ்/சம் இல்/லா நெஞ்/சு படைத்/தோன்

நே/நே     நே/நே     நே/நே     நி/நே

வஞ்/சம் வைத்/துப் பிரிந்/தா/னோ?

நே/நே      நே/நே     நி/நே/நே

துஞ்/சா/து வருந்/தும் குவ/ளைக் கண்/ணே

நே/நே/நே     நி/நே       நி/நே     நே/நே

ஆசிரியப்பாவிற்குரிய சீர்

மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் (அலகிட்டு வாய்பாடு கூறுக எனப் பள்ளிநாளில் படித்திருப்போமே. அதுதான் இது)

நேர் நேர்   –  தேமா                              மாச்சீர்

நிரை நேர்  –  புளிமா

நேர் நிரை   –  கூவிளம்                     விளச்சீர்

நிரை நிரை  –  கருவிளம்

நேர் நேர் நேர்  –  தேமாங்காய்

நிரை நேர் நேர் –  புளிமாங்காய்                                    காய்ச்சீர்

நேர் நிரை நேர் –  கூவிளங்காய்

நிரை நிரை நேர் –  கருவிளங்காய்

நேர் நேர் நிரை  – தேமாங்கனி

நிரை நேர் நிரை – புளிமாங்கனி

நேர் நிரை நிரை  – கூவிளங்கனி                       கனிச்சீர்

நிரை நிரை நிரை – கருவிளங்கனி

சான்றுப் பாடல் (சீர் பகுப்பு)

அன்/னாய்   –  நே நே – தேமா – மாச்சீர்

வா/ழி   –  நே நே – தேமா – மாச்சீர்

தேன்/மலை  –  நே நி – கூவிளம் – விளச்சீர்

நா/டன்   –  நே நே – தேமா – மாச்சீர்

வஞ்/சம்  –  நே நே  – தேமா– மாச்சீர்

இல்/லா   –  நே நே – தேமா – மாச்சீர்

நெஞ்/சு    –   நே நே  – தேமா – மாச்சீர்

படைத்/தோன்  – நி நே  – புளிமா – மாச்சீர்

வஞ்/சம்  –  நே நே  – தேமா – மாச்சீர்

வைத்/துப்  –  நே நே  – தேமா – மாச்சீர்

பிரிந்/தா/னோ?  –  நி நே நே  – புளிமாங்காய் – காய்ச்சீர்

துஞ்/சா/து  –  நே நே நே – தேமாங்காய் – காய்ச்சீர்

வருந்/தும்  –  நே நே  – தேமா – மாச்சீர்

குவ/ளைக்  –  நி நே  – புளிமா – மாச்சீர்

கண்/ணே  –  நே நே  – தேமா – மாச்சீர்

(இறுதிச் சொல் ஏகாரத்தில்  முடிந்துள்ளது)

ஆசிரியப்பாவிற்குரிய தளை :

ஆசிரியப்பாவிற்குரிய  தளைகள் இரண்டு

  1. நேரொன்றாசிரியத் தளை (மாமுன் நேர்)
  2. நிரையொன்றாசிரியத் தளை (விளமுன் நிரை)

சான்று

  1. யா/யும் ஞா/யும்  யாரா/கியரோ

நே/நே   நே/நே

தேமா   (மா முன் நேர்)    –  நேரொன்றாசிரியத்தளை

  1. செம்/புலப் பெயல்/நீர் போல

நே/ நி     நி  / நே

கூவிளம்   (விளம் முன் நிரை)   –  நிரையொன்றாசிரியத்தளை

குறிப்பு :  நேர் முன் நேர் வருவது  –  நேரொன்றாசிரியத்தளை

நிரை முன் நிரை வருவது  –   நிரையொன்றாசிரியத்தளை

ஆசிரியப்பாவில் பிற தளைகள் வருமா?

ஆசிரியப்பாவில் பிற தளைகள் வரும். வஞ்சித்தளைகள் மட்டும் வராது.

  1.  இயற்சீர்வெண்டளை –      மா முன் நிரை

விளம் முன் நேர்

  1. வெண்சீர் வெண்டளை – காய் முன் நேர்
  2. கலித்தளை – காய் முன் நிரை

சான்றுப் பாடல் (தளை பகுப்பு)

அன்/னாய் வா/ழி

நே/நே  நே/நே   –   மாமுன் நேர் – நேரொன்றாசிரியத்தளை

வா/ழி தேன்/மலை

நே/நே  நே நி – மாமுன்நேர் – நேரொன்றாசிரியத்தளை

தேன்/மலை நா/டன்

நே/நி  நே நே – விளம்முன்நேர் – இயற்சீர்வெண்டளை

நா/டன்  வஞ்/சம்;

நே/நே  நே நே – மாமுன்நேர் – நேரொன்றாசிரியத்தளை

வஞ்/சம் இல்/லா

நே/நே  நே/நே – மாமுன்நேர் – நேரொன்றாசிரியத்தளை

இல்/லா நெஞ்/சு

நே/நே  நே/நே – மாமுன்நேர் – நேரொன்றாசிரியத்தளை

நெஞ்/சு படைத்/தோன்

நே/நே   நி/நே –  மாமுன்நிரை – இயற்சீர்வெண்டளை

படைத்/தோன் வஞ்/சம்

நி/நே  நே/நே – மாமுன்நேர் – நேரொன்றாசிரியத்தளை

வஞ்/சம் வைத்/துப்

நே/நே/  நே/நே – மாமுன்நேர் – நேரொன்றாசிரியத்தளை

வைத்/துப் பிரிந்/தா/னோ?

நே/நே  நி/நே/நே  –  மாமுன்நிரை – இயற்சீர் வெண்டளை

பிரிந்/தா/னோ துஞ்/சா/து

நி/நே/நே, நே நே நே  – காய்முன்நேர் – வெண்சீர் வெண்டளை

துஞ்/சா/து வருந்/தும்

நே நே நே  நி நே – காய்முன்நிரை – கலித்தளை

வருந்/தும்  குவ/ளைக்

நி  நே  நி  நே  –   மாமுன்நிரை – இயற்சீர் வெண்டளை

குவ/ளைக் கண்/ணே

நி நே  நே நே  –    மாமுன்நேர் – நேரொன்றாசிரியத்தளை

பாடல் அழகியல் (கவித்துவம்) பேணும் வழிமுறைகள்

  1. முரண் சொல் பயன்படுத்தலாம்

வெண்மை – கருமை, ஒளி – இருள்

  1. சொற்சுருக்கம் செய்யலாம்

வாருங்கள் – வம்மின், வாரீர்

செல்லுங்கள் – செல்மின்

பாருங்கள் – பார்மின்

  1. சொல் தேர்வு செய்து பயன்படுத்தலாம்

பார், ஞாலம், உலகம், பூமி, நிலம்,

கவின், ஐ, அழகு

தலைவன், நாடன், சேர்ப்பன், கொடிச்சி, ஆயன், ஆய்ச்சி

4. அளபெடை பயன்படுத்தலாம்

தொழாள் – தொழாஅள்

5. கற்பனை கலக்கலாம், உவமை சேர்க்கலாம்.

மலரன்ன கண்ணாள்

  1. காட்சிப் பின்புலம் அமைக்கலாம்.

நில அமைப்புகள் சார்ந்தவை

வேம்பூ

வேம்பே பூத்தாய் வேனில் காலமே,

வேந்தன் பாண்டியன் சூடவே மணந்தாயே,

கத்திபோல் இலைசூழக் கொத்தாய் பூத்தாயே,

கசந்தே பிறந்தாலும் தருகின்றாய் களிப்பே!