குறுந்தொகை 40 – அகவல்பா

இந்தப் பாடலை அடிப்படையாக வைத்து,  அகவல் பாவில், தலைவன் தலைவியின் காதலைக் குறிக்கும் பாடலை எழுதுங்கள்.  ஐந்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.  முனைவர் அருள்மொழி அவர்கள் திருத்தியபின், உங்கள் பாடலை இங்கு வெளியிடுவோம்.

குறுந்தொகை 40, செம்புலப் பெயனீரார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

பொருளுரை:   என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் எந்த விதத்தில் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர்?  என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்கள்?  நானும் நீயும் எவ்வாறு ஒருவரை ஒருவர் முன்பு அறிந்திருந்தோம்?  மழை நீர் செம்மண் நிலத்தில் விழுந்து கலந்தது போல் நம்முடைய அன்பான நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டுள்ளன.
சொற்பொருள்:   யாயும் – என்னுடைய தாயும், ஞாயும் – உன்னுடைய தாயும், யார் ஆகியரோ – ஒருவரை ஒருவர் அறிந்திருந்தார்களா, எந்தையும்- என்னுடைய தந்தையும், நுந்தையும் – உன்னுடைய தந்தையும், எம்முறை – எந்த முறையில், கேளிர்- உறவினர்கள், யானும் நீயும் – நானும் நீயும், எவ்வழி – எந்த உறவின் வழியாக, அறிதும் – ஒருவரையொருவர் அறிந்து கொண்டோம், செம்புலப் பெயல் நீர் போல – செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்  – அன்பான நெஞ்சங்கள், தாம் – தாமாகவே, கலந்தனவே – கலந்துகொண்டன