தமிழன்னை
(1)
அந்தாதி
(எழுதியவர் – முனைவர் ந. அருள்மொழி
உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
கோளாம் பரிதியும் கோளாம் நிலவும்
தாளைப் பதித்திட்ட நிறைநாளில் – நாளும்
பாரினில் மாந்தரெல்லாம் இன்புறவே தோன்றினாள்
சீரினில் தோய்செம் மொழி
செம்மொழிப் பெண்ணாள் பிறந்ததோர் சீா்கண்டு
எம்மொழி எம்மொழி என்றார் – தேம்மொழிக்கு
வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்துக் கலந்தே
நல்தமிழென இட்டார் பெயா்
பெயா்பெற்ற இன்தமிழோ மங்கையாய் மலா்ந்தே
செயற்கரும் செம்மைவினை செய்தாள் – பெயல்நீா்போல்
தாய்மைசால் பெண்ணானாள் தமிழ்க்குடி யோடு
ஆயம்சால் திராவிடம் ஈன்று
ஈன்ற நங்கை தமிழாள் வாய்மையும் அறிவறமும்
சான்ற புலவா் ஈந்தாள் – ஆன்றோர்
தெள்ளுதமிழ் மங்கை புகழிசைக்க நின்றார்
கள்ளமில்லா எழுத்தாணி எடுத்து
எடுத்த எழுத்தாணி அறமென்றே சாற்றித்
தொடுத்தார் மருதனிள நாகனார் – கொடுத்தவோர்
வாழ்வு வேண்டிப் பொய்கூறே னென்றார்
தாழ்தலிலாச் சங்கப்பா சமைத்து
சமைத்த இலக்கியத் தூய்மை கண்டு
இமைக்காத ஔவைப் பிராட்டியும் – தமைச்சுட்டி
எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறென்றே
எய்தினாள் மன்னு புகழ்
புகழ்தனை எட்டுத்திசை நாட்டிய வள்ளுவரோ
திகழ்புகழ் ஈரடிப்பா ஈந்தார் – இமிழ்கடலும்
இமையோரும் ஏத்தும் உலகமறை தன்னைப்
பகையோரும் ஏற்றனா் மலா்ந்து
மலா்ந்த பக்திப் பரம்பரைச் சொத்தெனவே
அலா்ந்த அடியார்தம் பாக்கள் – மலா்ந்த
உள்ளமெல்லாம் சிற்றிலக்கியச் சீர்மை கண்டாள்
கள்ளமில்லாக் காரிகையாள் தமிழ்
தமிழன்னை நூலெல்லாம் இணையம் சேர
தமிழென்னை ஆண்டதென்றார் பாரோர் – தமிழன்னாய்
தொல்காப் பியப்புலவன் உன்னைச் சீராக்கிடப்
பல்லுலகும் போற்றவே வளா்
வளா்கின்றாய் வாழ்கின்றாய் இக்காலத் தமிழாய்
உயா்கின்றாய் உலகப் பந்தாய் – மலா்கின்றாய்
புலம்தொழு ஆதியாய்! புலம்பெயா் சோதியாய்
நிலம்தொழ வாழ்த்துவம் கனிந்து
(2)
(எழுதியவர் – பறம்பு நாட்டான் கார்த்திக் காவேரிசெல்வன்,
New Jersey, USA)
அகவற்பா
நான்பொறி கொண்டு ஐம்பூதம் கண்டதும்
நாப்பொறி வந்து நன்னிசை ஆனாய்
கற்றைக் கூறுகள் காணும் முன்னரே
காற்றில் கலந்துதொல் காப்பியம் ஆனாய்
சமயம் பலவாகிச் செருவிட்ட பொழுதிலும்
சமமாய் அப்பாக்களின் சாறென ஆனாய்
இனமதின் விடுதலை இனமாக வேண்டி
மனமதை முறுக்கும் மத்தளம் ஆனாய்
கட்டற்ற இச்சையில் கரைகடந்து சென்றோரும்
ஒட்டுறவு பேணும் ஒருணா்வாய் ஆனாய்
அதுவுமாகி இதுவுமாகி உதுவுமாகி
யாதுமாகி நின்றதனால் யாயுமானாய் என்தமிழே!
(3)
(எழுதியவர் – சே.வளர்மதி, முதுகலை முதலாம் ஆண்டு (தமிழ்)
அஞ்சாக் கல்லூரி கல்லுாரி, சிவகாசி, தமிழ்நாடு)
காலம் கடந்தும் வாழ்ந்தாய் செம்மொழியானாய்!
கரை கடந்தும் வாழ்ந்தாய் புலம்பெயர்தமிழானாய்!
இசைநயம் கொண்டு வாழ்ந்தாய் இலக்கியமானாய்!
இலக்கியத்திற்கு இனிமை சேர்த்திடும் இலக்கணமானாய்!
நாடு போற்றும் நாட்டுப்புற மக்களுக்கு இசைத் தமிழானாய்!
தென்மொழிகள் கலந்து வாழ்ந்தாய் திராவிடமானாய்!
பார்போற்றும் பாரதத்தில் பண்பாட்டுத் தமிழானாய்!
பண்பாட்டைப் பன்னாட்டிற்கு அறிவித்திடப் படைப்புத் தமிழானாய்!
(4)
புதுக்கவிதை
(எழுதியவர் – M.V. கனிமொழி, New Jersey, USA)
தண்குளிர்மொழியாள்
கண்குளிர அரியணைக் காண
சொல்மாலை கூட்டியே
பாமாலை சூட்டினேன்
என் தமிழன்னை
திருக்குறளின் அறமாவாள்
நற்றிணையின் கனிமொழியாள்
நாலடியின் நீதிமொழியாள்
முதுமொழியின் பழமொழியாள்
தமிழ்யென்றும் செம்மொழியாள்
தேனடையின் இன்மொழியாள்
அகக் கற்பனையில் ஓவியமானவள்;
புறம் வரலாற்றின் சுவடானவள்;
குறிஞ்சி மஞ்ஞையாய் நடமாடினாள்;
நெய்தலில் திரைஅலையாய் ஆர்ப்பரித்தவள்;
மருத நெற்கதிரின் எழிலானவள்;
முல்லை முகிலினங்களின் மழைத் துளியானவள்!
காமாலைக் கண்ணுடையோர் காண்பதில்லை
கன்னல் மொழியாளின் கவினழகை!
உன்னில் நூற்கள் பலசமைத்து,
தெருக்கள் தோறும் தமிழிசைத்து,
கொஞ்சிடும் மழலைகளின்
பெயர்களிலே தமிழாட,
கவின் தமிழின்
விறல்தனைக் கொண்டாட,
தமிழ் நிலமே அதிர்ந்திட
பறை ஒலிப்போம்! பறை ஒலிப்போம்!
தமிழ் அன்னைக்கு முடிசூட்டிட
பறை ஒலிப்போம்! பறை ஒலிப்போம்!
(5)
(எழுதியவர் – பெ. கஜலட்சுமி,
முதுகலை முதலாம் ஆண்டு (தமிழ்)
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
மனதை ஆர்ப்பரிக்கும் தமிழாம் – நல்ல
மக்களை உருவாக்கிடும் தமிழாம்!
தமிழையே மொழியாய் அணிந்தவளாம்!
தமிழரையே பெருமையாய்ப் பெற்றவளாம்!
தோன்றின் புகழொடு தோன்றியவளாம்!
தோன்றியவர் போற்றும் இனியவளாம்!
உலகம் முழுமையும் ஆள்பவளாம்!
உன்னதத் தமிழை ஈன்றவளாம்!
ஞாலத்தின் ஆதியாய் அரும்பெடுத்தவளாம் – நல்ல
கமலத்தின் நாற்றமாய்ப் பூத்தவளாம்!
மெய்மைப் பொருளாய் விளங்குபவளாம் – மிக்க
திண்மையினைத் தந்திடும் திறமுடையவளாம்!
முத்தமிழின் முதன்மையாய் இருப்பவளாம்
மூத்தகுடி மொழியாய் விளங்குபவளாம்!
அயல்நாடுகளின் அன்னையானவளாம் – நல்ல
அந்நிய மக்களின் தோழியானவளாம்!
(6)
(எழுதியவர் – சங்கர் சுவாமிநாதன், பெங்களூர்)
உலகந் தோன்றிய துடனே தோன்றிய
உயரிய மொழிநம் செந்தமிழ் – மண்
நலமுற முப்பால் அறத்திருக் குறளதை
அருளிய பரம்பொருள் நம்தமிழ்
தொல்காப் பியத்தைத் துகிலாய் உடுத்திய
தெய்வத் தமிழெனும் திருமகள் – மறை
திருக்குறள் நெற்றித் திலகம் திருத்திய
அறவடி வாகிய பெருமகள்
ஐம்பெருங் காப்பிய அணிகலன் சூடிய
அருந்தமிழ் அமிழ்தப் பெருமழை – அவள்
ஐயிரு விரலணி பத்துப் பாட்டென
அழகுற அணிந்த ஆயிழை
எட்டுத் தொகையிடை அட்டிகை கட்டிய
தமிழவள் புன்னகை குறுந்தொகை – திசை
எட்டும் வியந்திடும் காவிய காப்பிய
இலக்கியம் வழங்கிய பெருந்தகை.
சிலப்பதி காரச் சிலம்புகள் பூட்டிய
மலரடி மாமகள் பூந்தமிழ் – முழு
உலகத் தமிழர் உடல்கள் சேர்ந்து
சுமக்கும் ஓருயிர் தீந்தமிழ்
விளக்கென உய்யும் திசைவழி காட்டும்
தமிழொரு கலங்கரைப் பேரொளி – தன்னை
அளக்க முனைவோர் புருவம் உடைக்கும்
அன்னைத் தமிழ்வான் பெருவெளி
தோற்றம் காணும் முயற்சியில் எல்லாம்
தோற்றுப் போனது வரலாறு – மனித
ஆற்றல் தாண்டிய மாமொழி யேஎம்
தாய்மொழி ஆனது பெரும்பேறு.
(7)
(எழுதியவர் – ஜெ.ரீத்தா, முதுகலை முதலாம் ஆண்டு (தமிழ்)
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
இமயம் முதல் குமரி வரை வளர்ந்த மொழி! – என்றும்
இளமை பொருந்திய திராவிட மொழி!
இலக்கியம் அமைத்த இன்மொழி! – பல
இலக்கணத்தைப் படைத்த நன்மொழி!
தமிழரின் நாகரிகத்தை வகுத்தாய்! – நல்ல
தமிழ்ப் புலவர்களைப் பகுத்தாய்!
செம்மொழி என்ற பெயரினைப் பெற்றாய்! – நாட்டில்
செழுமை மொழியினைப் படைத்தாய்!
ஆதியிலே ஆலமரமாய்த் தோன்றினாய்! – இன்று
அகிலம் முழுவதும் ஆண்டாய்!
தாய்மொழி வரம் பெற்றாய்! – பலருக்கும்
தாய்மை உணர்வை ஊட்டினாய்!
தமிழர் பண்பாட்டைப் பண்படுத்தினாய்! – அதுபோல
தமிழர்க்கென்று கலாச்சாரம் கற்பித்தாய்!
அறிஞர் உருவாக்கும் திறன் படைத்தாய்! – இன்று
தரணி போற்றப் பெயர் பெற்றாய்!
கசடறக் கற்றுத் தந்தாய்! – பலருக்கும்
கனிவாய்த் துணை புரிந்தாய்!
பாரதியார் போற்றிப் புகழ்ந்த மொழியானாய்! – அடடே
பன்னாட்டு மொழியிலும் சிறந்த மொழியானாய்!
(8)
(எழுதியவர் – ராஜகோபால், சென்னை, தமிழ்நாடு)
தமிழே! தாயே! தாரணி திருமகளே!
தவமென்ன புரிந்தோம் தாலாட்டும்
தமிழே எம்மொழி எனவாகப் பெற்றோம்
ஐயனும் இளவலும் தேனினு மினிதாய்ப்
பாயுரம் தந்தனர் அஃதன்றோ
வையம் எல்லாம் மறையென ஏத்துவர்
பாரெங்கும் மொழிக ளாயிரம் இருந்தும்
இனிக்கும் எங்கள் தமிழே
என்றைக்கும் மறவாத உள்ளம் பெறுவோம்
கழகங்கள் மூன்று அமைத்து எங்கள்
முதுமக்கள் தழீஇய தமிழே
காலங்கள் கடந்தும் தழுவினோம்
எருத்தணியும் சிலம்பொடு மேகலை வளை
எழில் குண்டலமென காவியங்கள்
எழுத்தால் கலன்கள் சூடினாய் இன்தமிழே
வடக்கே வேங்கட மாவரை முற்றும்
கடல் மூன்றும் தரைச்சூழ்
நாடதனில் வாழ்கிறாய் நன்தமிழே
கன்றுக் கிரங்கி ஆழியில் தன்மகனை
கொன்று அறம் காத்து நின்றார்
பெருங்கோ எம்குல சிபி
ஈராயிரம் யாண்டு முன்தோன்றி நீர்ஆய்ந்து
ஈராயிரம் யாண்டும் நிற்க
கல்லணை எழுப்பித்தார் கரிகால் சோழர்
ஆய்தவறி கள்வனெ ன்றுகொன் றதனால்
மாய்த்தான் தன் உயிரை
தென்னவன் நெடுஞ் செழியப் பாண்டியன்
நெஞ்சைக் கவர்வதோர் உச்சி பெயர்ப்பதோர்
தஞ்சை பெருமாடக் கோயிலதை
மிஞ்சஇல் ஒன்று எனஈந்தார் இராஜராஜன்
ஓராயிரம் யாண்டு முன்எழு திருக்கற்றளி
ஓராயிரம் யாண்டாய் நின்று
ஓராயிரம் யாண்டும் நிற்க தஞ்சைத் தளியே
அண்ணா மலையாரின் அருட்பெரும் எழில்
கணினி களம் புகுமொழி
கணினி இயலிலும் எம்மொழி சேர்த்தார்
(9)
புதுக்கவிதை
(எழுதியவர் – தயா, New Jersey, USA)
தமிழன்னையே! தரணியில் வேருான்ற விழுதிட்டவளே!
காலம் காலமாய் என்னைத் தொடரும்
கொப்பூழ்க்கொடி உறவு நீ!
என் கண்ணை மூடியது, அந்நிய நாட்டு வாசமா?
இல்லை பிற மொழிகளின் தாக்கமா
அவசரமான வாழ்க்கைப் போக்கா
இல்லை அலுவலின் மோகமா
அன்னையே! உன்னை மறந்தது ஏனோ
பித்தனாய் இன்று அலைகிறேன்!
உள்ளக் குமுறலில் புழுங்குகிறேன்!
என் நெஞ்சே என்னை என் செய்ய!
தமிழன்னையே,
என்னை வளர்த்து ஆளாக்கினாய்!
இந்த மெய் உடலுக்கு, உயிரூட்டினாய்!
அழகாகக் கவிதையில் சிலேடை பிடித்தாய்
ஆகா! கதையும் பேசினாய்
இலக்கியத்தின் கருவை அலசினாய்
ஈசனின் நெற்றிக்கண்ணையும் திறந்தாய்
உலகவியலையும் அளந்தாய்
ஊனமற்று என்னுள் இருந்தாய்
என்னுள் பூட்டிய புதையலை எடுத்தாய்
ஏதும் விடுதலில்லை என்றாய்
ஐயம் விலக்கினாய்
ஒருமித்து இருந்தாய்!
ஓதி இலயித்தாய்
ஒளடதமும் கொடுத்தாய்
மூச்சுவிட நேரம் வந்தால்
விடுகவியும், விடுகதைகளையும் விளாசுகிறாய்
ம்ம்ம்ம்…… ஐயகோ!
நான் செய்த தவறை என் சொல்ல?
பல நாட்களாகி விட்டதே உன்னைப்பிரிந்து
யுகங்கள் போல் தெரிகிறதே உன்னை மறந்து!
இதோ உன் வருகைக்காக நான் தவம் செய்கிறேன்
என் இல்லத்தின் வாசல் உன் திக்கே
என் உறக்கத்தின் உளறலும் உன் வசமே
என் ஆடலும் பாடலும் உன்னாலே
என் மழலையின் வாய்மொழி இப்போது நீ தாய்மொழி
இந்த தவத்தை ஏற்று என்னை மன்னிப்பாயா
என் பாவம் போக்கி என் சந்ததி தழைக்கக் கூட வருவாயா?
தமிழன்னையே!
என் மகன் – மகளுக்கு, நீ அந்நியமானால்
நானும் ஒருநாள் அவர்களுக்கு அந்நியமாவேன்
தவறுணர்ந்த இந்தப் பேதையை மன்னித்திடு
காலமுள்ள வரை என் சந்ததிகளோடு கலந்திரு…….”
(10)
(எழுதியவர் – ஞா. ஆஷிகா ஞான ரேஷ்மா
இளநிலை முதலாம் ஆண்டு (வேதியியல்)
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
பரந்து விரிந்த எங்கள் நாடு
பார் பார்க்கும் எங்கள் நாடு
வேற்றுமைகள் பல மிதக்கும் நாடு
மதங்கள் பல விளையும் நாடு
இனங்கள் நிறைந்த தமிழ்நாடு
மனிதர்கள் மிகுந்த கவிநாடு
மீசை முறுக்கும் பாரதியின் நாடு
வானம் புகழும் கலாமின் நாடு
தமிழ் மக்கள் புலம் பெயர்ந்தாலும்
பலமுள்ள மொழி எங்கள் தமிழ்
நம் சுவடை அழியாமல் தாங்கும்
தமிழ் அன்னையின் பாதம் பணிந்து தொழுவோம்.
(11)
(எழுதியவர் – புஷ்பன் ராஜையன், Dallas, Texas, USA)
அவள் உயிர்பிய்த்துஉயிர் தந்தாள்என் அன்னை !
உயிரும் மெய்யும் ஊட்டியே வளர்த்தாள்தமிழ் அன்னை!
தாயும் தகப்பனும் ஊரும் உறவும் காட்டித் தந்தாள் என் அன்னை !
தாயும் தகப்பனும் ஊரும் உறவும் உலகமுமானாள்தமிழ் அன்னை!
அறு சுவை ஊட்டியே வளர்த்தாள் என் அன்னை !
வற்றாத சுவை ஊட்டியே வளர்த்தாள் தமிழ் அன்னை!
நான் வாழ அவள் வாழ்ந்தாள் என் அன்னை !
உலகோடு நான் வாழ வழிதந்தாள் தமிழ் அன்னை!
(12)
(எழுதியவர் -அ. அனுசுயாதேவி
இளநிலைமுதலாம் ஆண்டு (இயற்பியல்)
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
அமுதகானமாய் வந்து எங்களை
ஆனந்தமாய் மகிழ்விப்பவள் நீயே!
இன்றைய சமுதாயத்தை நல்விதமாய்
ஈன்றெடுத்த இனியவள் நீயே!
உன்னதமாய் உலகத்தை உயர்த்த
ஊன்றுகோலாய் நிற்பவள் நீயே!
எளிமையாய்க் கல்வி கற்க
ஏழைகளுக்கு உதவுபவள் நீயே!
ஐம்புலன்களை எல்லாம் அடக்கி
ஒழுக்கம் என்னும் குணத்தை
ஓடோடி வந்து கற்பிப்பவள் நீயே!
ஒளவை பாடிய தேனமுதே!
இஃது குணம் கொண்ட எம் தமிழன்னையே!
(13)
(எழுதியவர் – மெரின் சுஜனா ஆண்டுரூஸ், Pennsylvania, USA)
ஆண்டு பற்பல கடந்த உன்
அகவை பல்லாயிரமெனினும்
பேரிளம்பெண் அல்லவே நீ!
எழிலும், வளமும், நலமும் என்றும் குன்றா
சீரிளம் கன்னியன்றோ நீ!
அறம் சார் நல்லவையும்
மறம் சேர் வல்லவையும்
அன்பும் பண்பும் சூழ்ந்திட
அகமும், புறமும் உயர்ந்திட அறிவுறுத்தி
வையத்துக்கே நெறிமுறை கற்பித்த நங்கை நல்லாள் நீ!
தொன்று தொட்டு வாழும் செம்மொழி நீ!
இலக்கணம் விதித்ததோ தொல்காப்பியம்..
நற்றமிழ் வார்த்தை கோர்த்து
நம்மறிஞர் நல்கிய நன்னெறி நூல் சேர்த்து
என்றும் தமிழர் எம் வாழ்வியலுக்கே இலக்கணம் வகுத்தவள் நீ!
உலக உயிரனைத்தும் தம் உறவெனவே
உயரிய உள்ளம் கொண்டு
வந்தாரை வாழவைத்து, மனமார விருந்தோம்பி
தீமையதை மறந்து, நன்மையே நினைத்திடும்
தமிழ்மணம் மாறா தனித்துவ தத்துவம் தந்தவள் நீ!
தற்கால மாயையில் கட்டுண்டு
தமிழர் யாம் சற்றே தடம்புரண்டாலும்
எம் உயிரில் மெய்யாய் உறைந்த அன்னைத் தமிழே
உதிரத்தில் கலந்த உன் உணர்வால்
எக்காலமும் எங்கள் வாழ்வும், வழியும் உன்னோடு மட்டுமே!
(14)
(எழுதியவர் – சி.செல்வலட்சுமி
முதுகலை முதலாம் ஆண்டு (தமிழ்)
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
அன்னிய மொழிகளோ பல…. பல….
அகன்ற மொழியாய் அன்னையே நீ!
ஆழ்கடலில் முத்துக்களோ பல…. பல….
அயல்நாடுகளில் நிலைத்தாய் அன்னையே நீ…!
அன்புத்தமிழே! செந்தமிழே! தமிழன்னையே என்றும் நீ வாழ்கவே!
(15)
வெண்பா
(எழுதியவர் – மகேந்திரன் பெரியசாமி, Herndon VA, USA)
வேண்டும் பொழுதெல்லாம் வேண்டுமட்டும் பாப்புனையத்
தூண்டும் உயிர் நிலையே தேன்பாவே – என்மனத்தின்
சிந்தையின் சிந்தையில் திகழ்கின்ற தேவியே
விந்தை நிகழ்த்திடநீ வாராய்!
முறத்தால் வீரப் புலியை விரட்டிய
மறத்தில் உயர்ந்தது நம்மினம் – நம்மைத்
தடுக்கும் படைகள் அடுக்கி வரினும
முடுக்கம் நிறைந்த படை!
பசுவுக் கெனத்தன் மகனையும் கொன்று
திசுவைப் புல்லுக்காய் ஈந்தனர் – உன்னவர்
வீரம் ஈகைத்தன் மானத்தில் உயர்ந்து
தீரம் படைத்தனர் தேர்ந்து
பெற்ற படிப்பும் திரட்டிய செல்வமும்
பாருக் குதவுதல் வேண்டும் – தமிழரெம்
பாட்டுக் கலப்பைகள் கேட்போரின் நெஞ்சை
மீட்டாமல் பெறுமோ இசைவு
வானம் அளந்திட்ட வானவில் பாக்களால்
தேனமுது பாயும் தெளிவாய் – இருளை
விரட்டி யடித்து எழும்பும் கதிர்போல்
புரட்டி யடித்த புயல்
(16)
(எழுதியவர் – சிவசங்கர்
இளநிலை முதலாம் ஆண்டு (வேதியியல்)
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
கவிகள் போற்றும் இறையே
கலப்படம் இல்லாத அமுதே
அறிவுப் பசியைப் போக்கிடும் உணவே
இளமை மாறாத அழகே
ஆதியும் அந்தமும் ஆனவளே
உருவம் இல்லாத உறவே
தன்னகரில்லாத் தனித்துவம் கொண்டவளே
தொன்மைச் சிறப்புடையவளே
தொல்காப்பியப் பேச்சுடையவளே
உலகைக் காண உதவும் விழியே, தமிழே….
(17)
(எழுதியவர் – ராஜி வாஞ்சி, Texas, USA)
சங்கம் வைத்துப் புலவர்
தங்கமாய்த் தமிழ் வளர்த்த
அங்கயற்கண்ணி அரசாண்ட
மங்காப்புகழ் மதுரையிலே
சிங்காசனமிட்டுச் சிறந்தவளே
எங்களன்னைத் தமிழே வாழியவே !
ஆழிக்கடல் கடந்து இக்கரைக்கு
ஊழியம் பார்க்க வந்தோர்க்கு
புதையலாம் சங்கத்தமிழை
இதயபூர்வமாக விருந்தாக்கும்
அன்னைக்கு சிரம்தாழ
முன்னை என் வணக்கங்கள்.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலென
பிரித்து பாலையுடன் சேர்த்து
வாழும்நிலத்தினை ஐந்திணையாக்கி
நாளுமதை முதற்பொருளாக்கி
இதமாய் மனிதர்கள், மரங்கள்
விதவிதமாய் மலர்கள் மாக்கள்
கருப்பொருளாய்ப் படைத்து
உருகும் நுண்ணுணர்வையும்
பெருகும் வீரத்தையும்
உரிப்பொருளாகச் செய்து
விரித்து வகை செய்தனரே !
மானுட வாழ்வியலில்
காணுமிந்த கோட்பாடு
வானுயர்ந்த வளர்ச்சியென
பேணுகின்றனவே பிறநாடுகள்.
கேண்மையுடை கன்னியவள்
தேன்தமிழாள் வாழியவே!
அகரத்தில் தொடங்கி
அகத்தியம் வரை வளர்ந்து
அகமென்றும் புறமென்றும் – வாழ்விற்கு
முகவரியாய் வீரமும் ஈகையும்
புகுத்திக் காதலும் கடிமணமும்
சிகரமாய்ச் செப்பியதே.
ஒல்காப்புகழ் தொல்காப்பியர்
சொல்லாததும் ஒன்றுண்டோ?
எழுத்தென்றும் சொல்லென்றும்
பழுத்த பொருளென்றும் பலவாக
தொகுத்துத் தந்தாரே பரிணாமம்
வகுத்து விதி சொன்னாரே!
இயல் இசை நாடகமென – பயன்
பயக்க பண்படுத்தினரே
பண்டமிழ் பைந்தமிழர் புகழ்
விண்டிட வார்த்தையுண்டோ?
தண்டமிழ்த்தாய் வாழியவே!
நற்றிணை முதலாய்
பெற்றிட்டோம் சங்கத்தமிழ்
வற்றாச் செல்வமென
குறுந்தொகையும் ஐங்குறுநூறும்
வருங்கால சந்ததி அறிய
பதிற்றுப்பத்துடன் பரிபாடல்
சதிராடும் கலித்தொகையும்
அகநானூறுடன் புறநானூறு
நிகருண்டோ இவற்றுக்கு?
ஆற்றுப்படைகள் வழிகாட்ட
தோற்றிடுமோ தமிழர் வாக்கு
நெடுநல்வாடை பிரிவால்
படும்பாடு பகன்றிடுமே
குறிஞ்சிப்பாட்டுடனே முல்லையும்
பெரியதோர் மதுரைக் காஞ்சியும்
பட்டினப்பாலையும் உடன்
ஒட்டியே மலைபடுகடாம்
கொட்டி வைத்த செல்வமன்றோ?
பட்டான பைந்தமிழாள் வாழியவே!
எட்டா உயர்மாண்பு கூற
கிட்டினவே அறநூல்கள்
சங்கென முழங்கி வந்தனவே
சங்கம் மருவிய காலத்தே
சிலம்பும் மேகலையும்
பலர் போற்ற குண்டலகேசி சீவக
சிந்தாமணியும் காப்பியங்களாய்
வந்தனவே வாழிய நற்றமிழ் !
கம்பனும் வில்லிபுத்தூராரும்
தெம்பாகத் தீட்டினரே தீந்தமிழில்
பரமன் புகழை பல்கிப் பெருகி
வரத் தொடங்கினவே
சமகாலப் படைப்புகளாய்
சமய இலக்கியங்கள்.
பள்ளுப்பாட்டும் நயமாய்
நல்ல சிற்றிலக்கியங்களும்
துள்ளி வரத் திளைத்தாள்
நல்லை நனித்தமிழாள் – மனதைக்
கொள்ளை கொள்ள
முல்லைப் பூவாய் முகிழ்த்தன
பல்வேறு புலவர் கூட்டம்.
பாரதியும் தாசனும்
மாறாப்புகழுடை மற்றோரும்
அதில் அடக்கம் எந்நாளும் – உயர்
கதியடைவாள் எம்அன்னை
ஹார்வார்டில் இருக்கை பெற்று
பார் போற்ற பவனி வருவாள்
சீர்மகளாம் செம்மொழியாள்
கார்காலமாய் வாழ்ந்திடுவோம்!!
(18)
(எழுதியவர் – ஜ.விஜய், இளநிலைமுதலாம் ஆண்டு (இயற்பியல்)
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
அன்னையே! உன்னைச் செதுக்கிய
தொன்மைத் தமிழ் இன்பமே!
வளமையே! உன் வளத்தால் வாழும்
இளமைத் தமிழ்மொழியே!
வலிமையே! உன் வீரத்தால் வாழும்
இனிமைத் தமிழ்க் குடியே!
புதுமையே! உன் மாற்றத்தால்
தனித்தமிழ் இலக்கணமே!
உண்மையே! உன்மொழி பேசா எம்வாழ்க்கை
வெறுமை நிறைந்த தொல்லையே!
உன்னையே நம்பி வாழும் மக்களுக்கு
நன்மை அருள் புரியேன்!
(19)
(எழுதியவர் – மா.பொற்கொடி
முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்)
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
நேரிசை வெண்பா
யாரையும் நாடாமல் தானெனத் தனித்திலங்கி
யாருக்கும் கற்பிக்கும் செம்மொழியாள் – யாதொரு
பல்கலையும் நல்லறிவு நாடும் நல்லறமும்
எப்பொழுதும் ஏத்தித் தொழும்.
சிந்தியல் வெண்பா
தொகையால் எட்டாகி பாடலோடு பத்தாகி
மொழிக்கெல்லாம் அன்னையாய் மாசில்லாப் பெருமைதனைக்
கொண்டிலங் கும்கன் னியவள்.
(19)
(எழுதியவர் – சக்தி அருள், Los Angeles, Califoria, USA)
புதுக்கவிதை
பெற்றெடுத்த அன்னையால் உலகுக்கு அறிமுகமாகி
கற்றுவித்த தமிழன்னை அறிமுகப்படுத்தினாள் உலகை…
தானே வர இயலாமல் தாயைக் கடவுள் அனுப்ப
அக்கடவுளுக்கு இணையான தாயையே தம் அடைமொழியாய்
கொண்ட மொழி வேறொன்று உண்டோ தரணியில்!
தாய்ப்பாலால் மெய் வளர
தமிழ்ப்பாலில் உயிரோடு கலந்த மெய்யை
உயிர்மெய்யாய் கற்றதில்
மெய்யாக எம்முயிருமானாள்
இந்த தமிழன்னை…
பெற்ற அன்னை தருவது வாழ்க்கை
தமிழ் அன்னை தருவதோ வாழ்வு!
(20)
(எழுதியவர் -சொ.பாலமுருகன்
முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
கடலில் கரைந்து மூழ்கிப்போக
கன்னித் தமிழொன்றும் கரைக்கும் உப்பல்ல
மண்ணில் மக்கி மரணித்துப்போக
மழலைத் தமிழொன்றும் மக்கும் இலையல்ல
காற்றில் மிதந்து கரைந்துபோக
கடுந்தமிழ் ஒன்றும் கார்மேகம் அல்ல
காற்றில் கருகிச் சாம்பலாகிப்போக
கட்டித்தமிழ் ஒன்றும் காய்ந்த சருகல்ல
கூட்டில் அடைத்து பிடித்து வைக்க
குலவு தமிழொன்றும் சிட்டுக்குருவி அல்ல
சேற்றில் நசிந்து சிதைந்து போக
செந்தமிழொன்றும் சிறுசெடி அல்ல
அடுப்பில் எரியூட்டி எரித்தெடுக்க
அன்னைத் தமிழொன்றும் எரியும் விறகல்ல
சான்றோர் நாவிலும் – என்னை
ஈன்றோர் நாவிலும்
மூத்தோர் நாவிலும் – நாளை
முளைப்போர் நாவிலும்
இன்றோடு இன்றி என்றென்றும் எல்லாமுமாகி
என் அன்னைத் தமிழ்த்தாய்
எழு தமிழாய் வாழ்கின்றாள்….!
(21)
(எழுதியவர் – ராம்பிரசாத்
இளநிலை மூன்றாம் ஆண்டு இயற்பியல்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
உயிர், மெய், உயிர்மெய் என
எண்ணற்ற குழந்தைகளோடு
ஆய்த எழுத்தைப் பெற்றெத்த வீரத்தாய் இவள்!
கள்ளைப் பருகும் பனையோலையில்
காவியச் சுடராய்ப் பதிந்தாய்
எண்;ணற்ற அறிவுப் புதையலைப்
பாக்களில் நீயும் பகன்றாய்!
பிண்டம் அளக்கும் கரங்களினாலே
அண்டம் அளந்த அறிவுத்தாயே!
வானியலும் உன் வீட்டில்
மேயும் வான்கோழி ஆனது.
தொல்காப்பியரைத் தோளில் போட்டுக் கொண்டாய்
பல்காப்பியம் சொல்லித் தந்த நீ
யாதொரு மொழியிலும் இல்லாத
பொருளிலக்கணத்தைப் படைத்திருக்கிறாய்!
தாலாட்டின் சத்தத்தில்
தமிழ் மொழியின் உச்சத்தில்
விழித்தெழுந்த மன்னர்களால் செழித்தாய்!
நீ செவ்விலக்கியம் ஆனாய்
சைகை மொழியில் பேசிய
எங்கள் கரங்களை
விசைப்பலகையில் விடயங்களை
மொழியச் செய்தாய்!
அயலகவாழ் தமிழர்களையும்
கணினிவழி செம்மொழியில் பிணைத்திட்டாய்!
கணிக்க இயலா வயதிற்குரியவளே
வாழ்வாங்கு வாழ்ந்தவளே
உலகில் மன்னர் ஆட்சியோ
மக்கள் ஆட்சியோ எதுவாயினும்
நாவில் நீ நர்த்தமிடும் வரையில்
என்றும் உன் அரசாட்சியே!
எங்கள் இளவரசியே
எங்கள் மூச்சில் நிறைந்து
எங்களை வாழ்விக்கும் வாழ்வரசியே
வாழ்க வாழியவே!
(22)
(எழுதியவர் – முனைவர் இரா.சேவுகப்பெருமாள்
மேனாள் தாவரவியல் துறைத்தலைவர்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
மொழிகளில் தொன்மை என்பார்
முன்னது இதுதான் என்பார்
அமிழ்தினும் இனிது என்பார்
அவையத்தில் சிறந்தது என்பார்
விழியினும் மேலது என்பார்
விண்ணிலும் பெரிது என்பார்
ஆழியினும் அகண்டது என்பார்
அள்ளச்சுவை கூடும் என்பார்
கற்றிட இனிக்கும் என்பார்
களிமிகப் பயக்கும் என்பார்
நற்றிணை ஒன்றே போதும்
நலம்பல உரைக்கும் என்பார்
பற்றிஉன்னைப் பிடித்தால் போதும்
பாங்குறும் வாழ்வு என்பார்
வெற்றிடம் இல்லை என்பார்
விந்தை ஏதும்இல்லை என்பார்
கலங்கிய உளத்திற்கோர் கவின்மிகு
கலங்கரை விளக்கம் என்பார்
கலித்தொகை ஈந்த தினால்
காசினியில் மேலது என்பார்
வழித்துணை தேடுவோர்க்கு நாளும்
வரம்தரும் தெய்வம் என்பார்
அழித்திட முடியாத ஆழ்ந்த
அருஞ்சுனைத் தடாகம் என்பார்
உலகெலாம் வியந்து போற்றும்
உயர்கல்வி கம்பன் ஒளவை
சிலப்பதிகாரம் ஈந்த தமிழ்ச்
சிறந்த நற்கவி இளங்கோ
பலப்பல கவிதை ஈந்த
பாரதி மற்றும் தாசன்
சிலர்இவர் நீபெற் றெடுத்த
சிறந்த நல்மகவு என்பார்
மெய்ப்பொருள் உரைத்திடும் நல்ல
மேன்மைமிகு காப்பியங்கள் நன்றாம்
வெய்யோனின் குலத்து உதித்த
வீறுபுகழ் இராமகாதை நன்றாம்
மெய்யெல்லாம் நீறுபூசும் சிவந்தநல்
மேனியனின் சிவபுராணம் நன்றாம்
செய்யுளாய் வந்தஇவை உந்தன்
சீர்மிகு கட்கினிய அணிகளாகும்
இத்துணை புகழ் இருந்தும்
இதுவரை அறியாது உன்னை
மெத்தனமாய் இருந்து விட்டேன்
மேதினியில் யாது பயன்?
நித்திலமுமே! நீள்தமிழே! நற்றமிழே!
நீடுபுகழ் பலவும் பெறுக
சத்தியமாய்ச் சொல்கின்றேன் நாளும்
சந்ததியாய்த் தழைத்து நிற்பாய்!
(23)
(எழுதியவர் – சு.மகேஷ் பாண்டி
முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்)
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
தென்குமரிக் கடலை
உடையாய் உடுத்தியவளே!
வடக்குத் திசையை வளம் செய்த வாழ்வரசியே!
ஏடெடுத்துப் படித்ததில்லை நான்
எழுத்தாணியும் கண்டதில்லை நான்
நடவு செய்யும் வேளையிலே
என் நாவில் நங்கூரம் இட்டவள் நீ!
நாட்டுப்புறப் பாடல் பாடிய வேளையில்
என் நாவெல்லாம் இனித்தவள் நீ!
கடனைத்தான் கடலாய் வாங்கினேன்
மகனைத்தான் கடல்கடந்து அனுப்பினேன்
கடல் கடந்து சென்ற மகன்
காகிதம்தான் போடுகின்றான்
முத்து முத்தாக எழுதி
என் மூச்சைத்தான் காக்கின்றான்
உன் எழுத்தால் என் உயிருக்கு
உயிருந்தான் ஊட்டுகிறான்.
தமிழ் அன்னைத்தாயே!
என்னைக் காக்க வந்தவள் நீயே!
முகநூலும் சுட்டுரையும் கட்செவி அஞ்சலும்
கைவசப்படாத என் போன்றோர்க்கு
எழுத்தாணி விசைப்பலகைக் கணினி
இதயமாய் இருக்கிறது.
கன்னித் தமிழே நீ கணினித் தமிழ் ஆனாய்!
விறகு ஒடித்த கைகளையும்
விசைப்பலகையைச் சொடுக்க வைத்தாய்!
அறுந்து போன சொந்த பந்தங்களை
அலுங்காமல் குலுங்காமல் காத்திட்டாய்!
உன்னை நாவில் நிறுத்தி
என் முப்பாட்டன் எழுதி வைத்த
பாடல் எல்லாம் உலகின் முன்னோடியாய்
சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறது.
மூத்த குடியோன் என்ற பெருமையை
முரசறைந்து மொழிகிறது.
எல்லா வளமும் உன்னில் உண்டு
உன்னைக் கொண்டு உலகை ஆள்வோம்.
தத்தெடுப்போம் என் முப்பாட்டன்
புழங்கிய சொற் சொத்துக்களை
தத்தளிக்க விடமாட்டோம்.
தமிழ் அன்னையின் மீது ஆணையாக.
(24)
(எழுதியவர் – ஞா.உமாமகேஸ்வரி
இளநிலை முதலாம் ஆண்டு இயற்பியல்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு)
பரந்த உலகின் மூத்த மொழி
நான் பேசக் கிடைத்த மொழி
தேன் போல் தித்திக்கும் மொழி
என் வெற்றிக்கு வித்திடும் மொழி
பால் மணம் மாறாத குழந்தைக்கும்
தேன் குழைத்து ஊட்டிடும் மொழி
எந்த மொழி இவ்வுலகில் பிறந்திடினும்
என் தமிழ் மொழியின் இனிமை
கிடைத்திடல் அரிதாம்…….
(25)
(எழுதியவர் மா.மீனா
முதுகலை முதலாம் ஆண்டு (தமிழ்)
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி
தமிழ்நாடு)
திராவிடக் குடும்பப் பெயர் கொண்ட
தொன்மையானாய்!
விஞ்சும் மொழிக்கு இனிமையானாய்!
கெஞ்சும் புலவர்க்குப் புரவலரானாய்!
கொஞ்சும் மொழி அழகானாய்!
மிஞ்சும் ஞானச் செருக்கானாய்!
பக்தி மொழியாகப் பதிந்தாய்!
முக்தி மொழியாக முதிர்ந்தாய்!
முத்தமிழ்க் கலைகளை உருவாக்கினாய்!
இத்தமிழ்க் கலைகளுக்கு வித்தானாய்!
வானம் அளந்திடும் அனைத்தையும்
அளந்திட்டாய்!
வானம் அறிந்திடும் அனைத்தையும்
அறிந்திட்டாய்!
உலக மொழிகளில் செம்மொழியாகத்
திகழ்ந்தாய்!
இன்று அனைத்து ஊடகங்களிலும்
முன்னேறினாய்!
என்றென்றும் இறவாத இலக்கியமாக
நிலைத்து நிற்பாய்!