தலைவனைக் கனவில் காணுதல்
தலைவி தன்னுடைய கனவில் தலைவனைக் காண்கின்றாள். மெய்யாகவே தலைவனைக் கண்டதுபோல் எண்ணுகின்றாள். விழித்தபின் தோழியிடம் தன்னுடைய கனவைப் பற்றிக் கூறுகின்றாள்.
ஓர் எடுத்துக்காட்டு:
குறுந்தொகை 30, கச்சிப்பேட்டு நன்னாகையார், பாலைத் திணை – தலைவி சொன்னது
கேட்டிசின்! வாழி தோழி! அல்கல்
பொய்வலாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே, குவளை
வண்டுபடு மலரின் சாஅய்த் 5
தமியேன் மன்ற, அளியேன் யானே.
பொருளுரை: இதைக் கேளடி தோழி! இரவில் பொய் சொல்லுவதில் வல்லவனான என் காதலன் என் உடலை அணைத்ததைப் போல், உண்மையாகவே தோன்றிய பொய்க் கனவு ஒன்றை நான் கண்டேன். தூக்க மயக்கத்தில் அவன் என்று நினைத்து மெத்தையைத் தடவினேன். வண்டுகள் விழுந்து உழக்கிய குவளை மலரைப் போல நான் மெலிந்து, தனிமையில் தவிக்கின்றேன். நான் பரிதாபத்திற்கு உரியவள்!
சொற்பொருள்: கேட்டிசின் – கேட்பாயாக, வாழி தோழி – நீடு வாழ்வாயாக தோழி, அல்கல் – இரவில், பொய்வலாளன் – பொய் கூறுவதில் வல்லவன், மெய்யுறல் மரீஇய – என் உடலை அணைத்ததுப் போல், வாய்த்தகைப் பொய்க் கனா – மெய் போலும் தன்மையுடைய பொய்க் கனவு, மருட்ட – மயக்கத்தை உண்டாக்கிய, ஏற்றெழுந்து – தூக்கத்திலிருந்து எழுந்து, அமளி தைவந்தனனே – மெத்தையைத் தடவினேன், குவளை வண்டு படு மலரில் – வண்டுகள் விழுந்து உழக்கிய குவளை மலரைப் போல, சாஅய் – மெலிந்து, தமியேன் – தனிமையில் தவிக்கின்றேன், மன்ற – ஓர் அசைச் சொல், நிச்சயமாக, அளியேன் யானே – நான் பரிதாபத்திற்கு உரியவள்
————————————————————————————————————————————
ஆறு வரிகளுக்கு மேற்படாத பாடல் ஒன்றை, அகவல் பாவில் எழுதி அனுப்புங்கள். அனுப்பவேண்டிய இறுதி நாள் ஆகஸ்டு 15.
பாடல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: kavini100@gmail.com