தலைவியின் தூது

முதல் பரிசு பெற்றவர் – க. வசந்த், இரண்டாம் ஆண்டு, இயற்பியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி

இரண்டாவது பரிசு பெற்றவர்:
மா. பொற்கொடி, முனைவா் பட்ட ஆய்வாளா் (தமிழ்)
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி

——————————————————————————————————————————————

1.
நெஞ்சு விடு தூது
(எழுதியவர் – கொ. ஜெயஸ்ரீ,
முதுநிலை முதலாம் ஆண்டு தமிழ்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி)

அன்புடை நெஞ்சே! அன்புடை நெஞ்சே
தேனின் இனிமை பாலி்ன் தூய்மை
உண்டலின் இன்பம் விளைத்தல் போல
ஊடலும் கூடலும் விளைத்த
ஊரனை நோக்கிவா கிழத்தியா் மன்றே!

2
உயிர்க்காற்று விடு தூது
(எழுதியவர் – சங்கா், பெங்களுா்)

கார்நிறை கார்ப்பருவம் பிரிந்த பெரும!
அரபில் ஈட்டு பொருள்தான் அறமோ?
உயிரது பருகும் வாடைப் பிரிவால்
மாயோள் எம்மெய்யோ தீதீ
உயிருறை காற்றே செல்லாய் அரபே!

3.
குருகு விடு தூது
(எழுதியவர் – பெ. கஜலட்சுமி
முதுநிலை முதலாம் ஆண்டு தமிழ்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி)

இரைதோ் பார்ப்பே! இரைதோ் பார்ப்பே!
கரைசோ் கயல்பார்க்கும் குருகுப் பார்ப்பே!
திரைநீா் உலகு காக்கப் பண்டே
கரைகடந் திட்ட கானவன்
வரைந்திடு நாளை கூறாய் குருகே!

4
பரி விடு தூது

(எழுதியவர் – வடுகால் வெண்பரியன்
நியூஜெர்சி, அமெரிக்கா)

வன்முள் வீழ்த்திய வடுகால் வெண்பரி
என்னெஞ் சமா்ந்த எம்மோன் அறவன்
தம்மூா் காத்திடத் தெவ்வா் தபுத்தபின்
தன்னயா் தணிக்க மென்னுளை
வருடயில் எந்துயிர் இயம்புநீ வாழியே!

5.
நெஞ்சு விடு தூது
(எழுதியவர் – ஜெ. ரீத்தா
முதுநிலை முதலாம் ஆண்டு தமிழ்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி)

நாடும் தலைவன் வீடே உலகாய்
ஊடும் தலைவன் அன்பே உறவாய்
கூடும் தலைவன் அகத்துள் நாள்தொறும்
நல்வித் தாகிக் கனிந்ததை
நாள்தொறும் நாள்தொறும் உரைத்திடு நெஞ்சே!

6
குயில் விடு தூது

(எழுதியவர் – கனிமொழி, நியூஜெர்சி,
அமெரிக்கா)

கேளாய் குயிலே! கேளாய் குயிலே!
ஒள்வளை கவா்ந்த வெள்மலை ஊரன்!
தொலைவில் படா்ந்த தூயோன் தானும்
விரைந்து வரைந்திடப் பகன்றிடு
கரையும் மெய்காக்க விரைந்துரை துாதே!

7.
நெஞ்சு விடு தூது
(எழுதியவர் – மு. முத்துலட்சுமி
முதுநிலை முதலாம் ஆண்டு தமிழ்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி)

நில்லா நெஞ்சே! நில்லா நெஞ்சே!
கல்நிறை கானம் கடந்தோர் நினைந்து
பொல்லா நீருகுக்கும் கண்ணினை என்செய?
பஞ்சின் மென்அன் பினானை
நெஞ்சம் நிறைந்து கெஞ்சிடு நீயே!

8
காற்று விடு தூது

(எழுதியவர் – இராஜகோபால், சென்னை)

எவ்வழி என்பா் சென்றதோ அறியோம்
யாதும் அறிவாய் காற்றே! அவா்தம்
புகலிடம் புகுவாய் பசலை பூத்த
திடமென் வேய்தோள் தேயுறத்
தீதாற்றும் என்னிலை சென்றுரை விரைந்தே!

9.
வண்டு விடு தூது
(எழுதியவர் – வே. முருகலெட்சுமி
முதுநிலை முதலாம் ஆண்டு தமிழ்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி)

ஆா்க்கும் வண்டே! அம்சிறை வண்டே
தேரில் சேய்ப்புலம் அகன்ற நாடன்
கொடிச்சி பேரும் ஊரும் அறிந்திலா்
அம்சில் ஓதியின் அழகினை
அம்சில் சொல்லால் இயம்புக பரந்தே!

10.
நெஞ்சு விடு தூது
(எழுதியவர் – சி. செல்வலட்சுமி
முதுநிலை முதலாம் ஆண்டு தமிழ்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி)

வாழி நெஞ்சே! நெஞ்சே வாழி!
மண்ணோடு கலந்த மண்மணம் போன்ற
அன்புடை நெஞ்சன் அகம்நிறை மனத்தன்
கார்த்துளி கானகம் நிறைக்குமுன்
ஊர்விரைந் திடவே தூதுரை நெஞ்சே

11.
பரிதி விடு தூது
செ. வளா்மதி
(எழுதியவர் – முதுநிலை முதலாம் ஆண்டு தமிழ்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி)

சுடா்விடு பரிதியே! சுடா்விடு பரிதியே
சுடா்விழி யாளின் விழிநீா் பருகிடு!
பரிதியும் மதியும் பிரிந்து தோன்றுமாப்போல்
களத்தில் கானவனோ பரிதி
இல்லில் யானோ மதியா னேனே

12
மாரி விடு துாது

(எழுதியவர் – ந. அருள்மொழி
தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியா்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

காரில் சூலுற்று பாரில்பெய் மாரியே!
கார்சூழ் விசும்பு அன்ன மனத்தான்
தேரொடு பெயர்ந்து தேர்ந்த பொருளும்
காரொத்த விழியாளின் நீரினைக்
காத்திட ஒல்லுமோ? கூறாய் விரைந்தே!

13
நெஞ்சு விடு தூது

(எழுதியவர் – கனிமொழி, நியூஜெர்சி,
அமெரிக்கா)

பொருள்தனை ஈட்டச் செல்லேம் யானே
அருள்தரு நெஞ்சினன் எம்மன மஞ்ஞையின்
உண்கண் கலங்கிடக் கண்டே னாயினும்
செல்வமே மீமிசையின் மகிழ்ச்சி
செப்பிடு நெஞ்சே! அன்பு தோய்ந்தே!

14
மழைநீா் விடு தூது

(எழுதியவர் – அ. தமிழ் செல்வம், முதலாம் ஆண்டு, வேதியியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

வான்முகில் தோன்றி வன்நிலம் தொட்டிடும்
வான்புனலே! கானகத்தில் கானக நாடன்காண் !
மனம்கவர் மங்கை விழிநீா் உகுப்பதை
வனம்தனைக் கடந்து பொருளீட்டும்
திண்தோளா னிடம்நீயும் விரைந்துரை நீரே !

15
குயில் விடு தூது

(எழுதியவர் – மு. தீபன்குமார், இரண்டாம் ஆண்டு, இயற்பியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

காதில் இசைதனை நாள்தொறும் சூட்டும்
காக்கை மகளே! காக்கை மகளே!
கொடிச்சி என்றன் குரல்தான் நின்னிசை
ஒக்குமென்று உரைத்திட்ட அன்னான்
தக்கநாள் வந்திட உரைப்பாய் தூதே !

16
கயல் விடு தூது

(எழுதியவர் – க. வசந்த், இரண்டாம் ஆண்டு, இயற்பியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

இமையா விழியுடை தெளிவுடை சுனையின்கண்
உறையும் கயலே! மேனி இலங்க
நின்னுறையுள் நீராட ஏகுமென் கள்வனைக்
காணாத மாலையும் வீணாகிக்
கழியுதென ஊடலறுத் திடஉரை தூதே!

17
இறை விடு தூது

(எழுதியவர் – மா. ராஜ்குமார், முதலாம் ஆண்டு, வேதியியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

இறையே ! உலகு காக்கும் இறையே!
நெறியுடை பொருளீட்டக் கானம் கடந்த
அறநெறி நெஞ்சத்தான் மனதுள் உறைந்து
கற்புநெறி மாறாக் கன்னியிவள்
கார்கால நிலைதனை உரைப்பாய் இறையே!

18
பனிலம் (சங்கு) விடு தூது

(எழுதியவர் – மு. மதன்குமார், முதலாம் ஆண்டு, இயற்பியல்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி)

போர்களத்து நாள்தொறும் ஒலிக்கும் பனிலமே!
களம்புக்க வல்லோன் வினைமுடி பொழுதில்
தனிமைத் துயா்தீரா என்பெரு மூச்சதனை
ஒலியால் ஓயாது இயம்பி
கலிதீர வழிவகுத்து வந்திடு நீயே!

19
குயில் விடு தூது

(எழுதியவர் – மு.விக்னேஷ்குமார், முதலாம் ஆண்டு, இயற்பியல்
அஞ்சாக் கல்லூரி, சிவகாசி)

வஞ்சப் புவியில் தஞ்சமான் குயிலே!
மஞ்சுதவழ் மாலைப் பொழுதில் நில்லா
நெஞ்சம் கொண்ட என்னிலையை நீயும்
அஞ்சாப் பகைவா் அழித்து
எஞ்சாப் புகழீட்டும் ஊரனிடம் உரையே!

20
குரீஇ (குருவி) விடு தூது
(எழுதியவர் – மா. பொற்கொடி, முனைவா் பட்ட ஆய்வாளா் (தமிழ்)
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

சிறுகுரீஇ நீயுன் இணையொடு பறந்தேகி
சின்மொழி பகர்ந்திடுக! சின்மொழி பகர்ந்திடுக!
உரவோன் தானென வினைமுடிக்கச் சென்றோன்
கரத்தமா்ந்து கற்பிற் கினியாளைக்
கார்ப்பருவம் வருமுன் கூடுக என்றே!

21
நலம் விடு தூது

(எழுதியவர் – மு. மதன்குமார், முதலாம் ஆண்டு, வேதியியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

நலமாய் நாளும் வைத்திடு நலமே!
வாளும் குடையும் நலங்கொள நின்று
நாளும் பொழுதும் நன்கு வாய்த்திட
போர்க்களம் புக்க நாடனிடம்
நீா்க்கோலம் பூண்டமை இயம்புநீ வாழியே!

22
கிள்ளை விடு தூது

(எழுதியவர் – ச. கருப்பசாமி, முதலாம் ஆண்டு, இயற்பியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

மரகத வண்ணம் ஒத்த பைங்கிள்ளாய்
குருதிப் புனலொத்த அலகுடைக் கிள்ளையே!
ஏரார்ந்த விழியாள் பசலை பூத்த
கார்கால நிலையை நாடுகாக்கத்
தேரூா்ந் தானிடம் இயம்புநீ வாழியே!

23
மழை விடு தூது

(எழுதியவர் – ப. அகிலன், முதலாம் ஆண்டு, இயற்பியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

கருமுகில் வழியே பிறந்த வெண்மழையே!
ஆழிப் பேரலை விண்ணெழச் சிறுதெப்பம்
கரமேந்தி வளமீன் அள்ளும் நாடனிடம்
புனலொத்த விழியாளின் ஊடல்
நிழலொத்த அவன்வரவால் நீங்குமென உரையே!

24
இலை விடு தூது

(எழுதியவர் – கு. இரவிக்குமார், முதலாம் ஆண்டு, வேதியியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

மரங்களின் உறுப்பே! செவ்விய இலையே
உதிர்ந்தும் வளியில் கலந்து மிதந்து
நாடு காவல் ஏகிய நாடனிடம்
ஏகுவாய்! உயிர்கரையும் என்றன்
தகுநிலை உரைத்து மீள்வாய் இலையே!

25
வாள் விடு தூது

(எழுதியவர் -ஜ. விஜய், முதலாம் ஆண்டு, இயற்பியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

போரில் குருதியால் நீராடும் வாளே!
போர்க்களம் நீங்கிப் பாசறை புகுந்து
ஏர்நிறை தோளான் நின்னைப் புகழ்பொழுதில்
மாணெழில் கரையும் என்றன்
மழைக்கால நிலைதனைக் கூறாயோ வாளே!

26
மின்னல் விடு தூது

(எழுதியவர் – மு.கணேஷ்குமார், முதலாம் ஆண்டு, வேதியியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

கலிபறி புனல்தரு முகில்நடு பிளக்கும்
விழிபறி ஒளிதரு என்றன் ஊரன்போல்
நொடிதனில் மறையும் வெள்ளொளிக் கீற்றே!
கொடியிடை மங்கையின் அன்பை
இடியெனச் செவியில் இயம்புவாய் மின்னே!

27
உயிர் விடு தூது

(எழுதியவர் – அ. கார்த்திகேயன், முதலாம் ஆண்டு, வேதியியல்
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

களவுமலா் காலமும் களவுபடா் காலமும்
அளவளாவி ஆதி அந்தமென உறைஉயிரே!
நீருறை கண்ணாள் உயிரோன் பாசறை
உறைதரு பொழுதில் பறைபோல்
ஊர்தரு அலர்நீக்க உரையாய் நீயே!

28
சிறகு விடு தூது

மா. பொற்கொடி
(எழுதியவர் – முனைவா் பட்ட ஆய்வாளா் (தமிழ்)
அஞ்சாக் கல்லுாரி, சிவகாசி)

காற்றில் அலைந்திடு சிறகே! மென்சிறகே!
மேலே எழுக! இன்னும் மேலெழுக!
என்னுள் புக்கவன் என்னினியன் களம்நோக்கி
நகா்க! பிரிவினைத் தாங்கவொண்ணா
என்மன மென்மை உணா்த்திட
உன்னை விடவல்லார் யாருளா்செல் தூதே!