தலைவியின் நலம் பாராட்டல்

நலம் பாராட்டல்

தலைவியின் மீது மிகுந்த காதல் கொண்ட தலைவன், அவள் அழகைப் பாராட்டுவது, ‘நலம் பாராட்டல்’ என்பது.

ஐந்து வரிகளுக்கு மேற்படாத பாடல் ஒன்றை, அகவல்பாவில் எழுதி அனுப்புங்கள்.  அனுப்பவேண்டிய இறுதி நாள் மே 15.

பாடல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: kavini100@gmail.com

——————————————————————————————————————————————
பொருநராற்றுப்படை

பாடினியின் அழகு

அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல், 25
கொலை வில் புருவத்துக் கொழுங்கடை மழைக் கண்,
இலவிதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்ப்,
பல உறு முத்தின் பழி தீர் வெண்பல்,
மயிர் குறை கருவி மாண் கடையன்ன
பூங்குழை ஊசல் பொறை சால் காதின், 30
நாண் அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்,
ஆடு அமைப் பணைத் தோள், அரி மயிர் முன்கை,
நெடு வரை மிசைஇய காந்தள் மெல் விரல்,
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்,
அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து 35
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை,
நீர்ப் பெயல் சுழியின் நிறைந்த கொப்பூழ்,
உண்டென உணரா உயவும் நடுவின்
வண்டு இருப்பன்ன பல் காழ் அல்குல்,
இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின், 40
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப,
வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி,
அரக்கு உருக்கு அன்ன செந்நில ஒதுங்கலின்
பரல் பகை உழந்த நோயொடு சிவணி
மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் 45
நன்பகல் அந்தி நடையிடை விலங்கலில்,
பெடை மயில் உருவில், பெருந்தகு பாடினி (25-47)

———————————————————————————————————————————–
தலைவியின் அழகு – சங்க இலக்கியத்தில் காணப்படும் சில வர்ணனைகள்

கண் – கயல்மீன் போன்ற கண், மாவடுவை கத்தியால் பாதியாக கத்தியால் நறுக்கினாற் போன்ற கண், மையிட்ட கண் (உண்கண்), குவளை மலரைப் போன்ற கண், செவ்வரி படர்ந்த கண்கள், மழைக்கண்,  மலர்க்கண், பூங்கண்
இமை – ஆய் இதழ்
கூந்தல் (ஓதி, கதுப்பு, கூந்தல், அளகம்) – ஆற்றின் கருமையான அறல் ( அறல் = மென்மையான மணல்) போன்ற கூந்தல், கருமுகில் போன்ற கூந்தல், நறுமணமுடைய கூந்தல், இருங்கூந்தல் (கருங்கூந்தல்)
நுதல் (நெற்றி) – பிறை நிலா போன்ற நுதல், ஒளியுடைய நுதல், அழகான நுதல், நறுமணமான நுதல்
புருவம் – வில்லைப் போன்ற புருவங்கள்
பல் – முத்துப் போன்ற பல், கூர்மையான பல்,வெள்ளைப் பல், அழகிய பல்
விரல் – காந்தள் மலரின் இதழ் போன்ற விரல்
நகம் – கிளியின் வாயைப் போன்ற நகங்கள்
இடை – மின்னல் போன்ற இடை, கொடி போன்ற இடை, ஒடிந்து விடுமோ என்றாற் போன்ற மென்மையான இடை, இருக்கின்றது என்று அறிய முடியாத இடை
தோள் – பணைத் தோள், மூங்கிலைப் போன்ற தோள், மென்மையான தோள்
வாய் – பவளம் போன்ற வாய்
காது – கத்தரிக்கோலின் கைப்பிடியைப் போன்ற காது
எச்சில் – கரும்புச் சாறு போன்ற எச்சில்
சொல் – கிளியின் மழலையைப் போன்ற சொல், இனிமையான கிளவி
மார்பு – ஏந்திய மார்பு, தாமரை அரும்பைப் போன்ற மார்பு
மேனி – மாந்தளிர் போன்ற மேனி,பசலைப் படர்ந்த மேனி, சுணங்குடைய மேனி
அடி (பாதம்) – ஓடி இளைத்த நாயின் நாக்கைப் போன்ற அடி
அவளுடைய அழகு – மாமைக் கவின், மயில் இயல்

—————————————————————————————————————————————–