மகட்போக்கிய தாய்

மகட்போகிய நற்றாயின் துயர் – உடன்போக்கில் தலைவனுடன் தலைவியான தன்னுடைய மகள் சென்றபின் வருந்தும் தாயின் பாடல். 

(நற்றாய் = தலைவியைப் பெற்ற தாய்)

அகநானூறு 15, 35, 55, 105, 195, 203, 207, 219, 263, 275, 315, 383,
நற்றிணை 29, 66, 143, 179, 184, 271, 279, 293, 305
ஐங்குறுநூறு 313, 371, 372, 373, 374, 375, 376, 377, 378, 379, 391, 394, 399

ஐங்குறுநூறு 399, ஓதலாந்தையார், பாலைத் திணை – மகட் போக்கிய தாய்ச் சொன்னது – அவளுடைய மகள் தலைவனுடன் சென்றப் பின், தலைவனின் தாய் மீது உள்ள கோபத்துடன்  கூறியது
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,
எம் மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ, மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே?

பொருளுரை:   உன்னுடைய வீட்டில் என் மகளுடைய சிலம்பு கழிக்கும் நோன்பை நடத்தினாய்.  என்னுடைய வீட்டில் அவளுடைய திருமணத்தை நடத்தலாம் என்று  வெற்றி வேலையும் குற்றமில்லாது விளங்கும் கால் வீரக் கழல்களையும் அணிந்த,  பொய்யில் வல்லவனான அந்த இளைஞனின் தாய்க்கு நீங்கள் சொன்னால் என்ன?

நற்றிணை 179, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்,
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு  5
தீம் பால் உண்ணாள், வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள், மன்னே, இன்றே
மை அணல் காளை பொய் புகல் ஆக
அருஞ்சுரம் இறந்தனள் என்ப, தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே.  10

பொருளுரை:  எங்கள் இல்லத்தில் வளரும் வயலைக் கொடியை, கன்றை ஈன்ற பசுத் தின்றதால், தன்னுடைய பந்தை நிலத்திலே எறிந்து விட்டு, விளையாட்டுப் பாவையை (பொம்மையை) விலக்கி விட்டு, தன்னுடைய அழகிய வயிற்றில் அடித்துக் கொண்ட, செயலில் திறமையுடைய என்னுடைய இளமகள், மானோடு பொருந்திய கலங்கிய பார்வையை உடையவளாய், நானும் செவிலித் தாயும் தேனுடன் கூடிய இனிய பாலைக் குடிக்க ஊட்ட, குடிக்க மாட்டாள். விம்மி அழுவாள். நேற்றும் அவ்வாறு தான் இருந்தாள்.
இன்று, கருமையான தாடியையுடைய இளைஞன் ஒருவனின் பொய்ம்மொழிகளை உண்மை என்று ஏற்று, மயில் சிறகின் அடியைப் போன்ற தனது வெண்மையான பற்களில் நகையைத் தோற்றுவித்து, செல்லுதற்கு அரிய சுரத்தின்கண் சென்றனள் எனக் கூறுகின்றனர்.

நற்றிணை 184, பாடியர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்,
இனியே தாங்கு நின் அவலம் என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே,  5
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

பொருளுரை:  ஒரு மகளை மட்டுமே உடையவள் நான்.  அவளும் போரில் மிகுந்த வலிமையையும் கூரிய வேலையுமுடைய ஒரு இளைஞனோடு நேற்று பெரிய மலையில் உள்ள அரிய பாலை நிலத்திற்குச் சென்றாள்.  இனி உன்னுடைய துன்பத்தைத் பொறுத்துக் கொள் எனக் கூறுகின்றீர்கள்.  அது எவ்வாறு இயலும் அறிவு உடையவர்களே?  மை தீட்டிய கண்ணின் மணியில் வாழும் பாவை வெளியே நடந்து வந்தாற்போல, என்னுடைய அழகிய சாயலை உடைய இளைய மகள் விளையாடிய நீலமணியைப் போன்ற நொச்சி மரத்தையும் திண்ணையையும் நோக்கி, அவளை நினைத்தால் என் உள்ளம் வெந்து போகும்.


1.
திருவாய் பேசா முல்லைநல் மடமகளே
ஒருவாய் உருண்டைக்கு உன்னிதழ் மறுக்குமே
பச்சிளம் குழவியாய்க் கண்டேன் நின்னை
இளையனோடு இலையுதிர் கானகத்தே
உன்னிரு பாதம் பயணித்த தெங்கே?
சு. மகேஷ் பாண்டி
முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி.

2.
கண்ணின் மணியென இமைமூடிக் காத்தேன்
பண்ணின்நன் மொழியாளை ஊரவர் கௌவை
உறுதுயர் ஊட்டினும் எண்ணி யெண்ணி
மாய்கிறேன் நன்மகளின் நல்வரவை எண்ணியே
உளங்கொண்டான் உடனேகிச் சென்றாளே
கள்ளமில் பேதை யெனையும் மறந்தே!
மா. பொற்கொடி
முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி.

3.
பாவைதனைப் பயின்ற பனிமலர்ப் பாவையே!
சிலம்பு இட்டு ஆடிய மயிலே!
கானக ஓசை கேட்டு அஞ்சாயோ?
தனிமை போக்கத் தமியளாய்த் தலைவனுடன்
நெடிய தூரம்தான் சென்றாயோ
தாயவள் துயர்தீர வாராய் நீயே!
த. விஜயலட்சுமி
முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி

4.
வேய்புரை அழகுதோய் தோளாய்! மடமகளே!
தண்ணீர் நீத்துக் கண்ணீர் கொண்டேன்
காளையின் கரம்பற்றிக் கானகம் கடந்த
கன்னியின் காலடியைக் கண்டீரோ?
சிறகு முளைத்தாளைச் சிறையெடுத் தானே!
மு. சுமதி
முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி

5.
அந்திப் பொழுதும் ஆழ்ந்து போக
ஆளரவம் அடங்கி அயர்ந்து உறங்க
ஊரலர் உறங்காது செவிப்பறை அறைய
வன்மொழி கேட்டு இளையனோடு
காலிரண்டு நோகத்தான் சென்றாயோ நீயே!
பே. கஜலட்சுமி
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி

6
ஊர்காண் மன்றல் மறுத்துக் கள்ளம்நிறை
உள்ளத் துடையோன் சொல்தனை ஏற்றுப்
பசலை நோயை விட்டொழிக்க யெண்ணி
கிழவனொடு அயர்ந்தாய் போக்கு
கிழத்தியே! ஊரார் அலர்எமைச் சுடுதே!
சொ. பாலமுருகன்
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி

7.
பதுமை செலவே பலரது அலரே
தும்பைப் பூவண்ணச் சீரடி நோகுமே
வேற்று உலகம் அறியா மடந்தை
வேற்றுக் காளையொடு பறக்க
பதறும் மனமோ தாயது மனமே
க. அன்னலட்சுமி
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி

8.
பாவைதனை விளையாடிய பாவையே! நாளும்தான்
பூவைபோல் பேசிடும் பூவையே! வெண்ணிறப்
பாலன்ன மடந்தாய்! காளையொடு கடந்தாய்
பால்சோறு உண்ட கலமும்
கடந்த காலம்போல் தனிமை உடைத்தே.
பா. அன்னலட்சுமி
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி

9.
நிலவொளி பற்றி நிலாச்சோறு உண்ட நீ
காலவெளி பற்றிக் காளையொடு கடந்தாய்
அலையாய் நினைவலை சுழலச் சுழல
ஆழமாய் நெடுமூச்சு விட்டெறிந்து
அயற்புலம் அடைந்தாய் அலறும் அலரே!
செ. வளர்மதி
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி

10.
தாய்தனை மறந்து இளையனோடு இசைந்து
சுட்டிடும் சுரத்தே சுடுமணல் கடந்தாயோ?
நட்ட அலரும் பனிலமாய் ஆர்த்திடப்
பெற்றெடுத்த வயிறு இங்கே
பாதம் படர்ந்து போனது எங்கே?
ஜெ. ரீத்தா
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி

11
பொட்டிட்டுப் பூச்சூட்டி நெட்டி முறித்து
எட்டிட்டு நீநடக்க இமைக்க மறந்தேன்
வெல்வேல் காளையொடு சேயிழையாள் அரக்குதோய்
செவ்வடி படர்ந்து போனதெங்கே?
யாரிடம் கேட்கக் கானல் நீரே!
ஞா. விஜயலட்சுமி
முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி